வருமா மாரடைப்பு?



நம் இதயம் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவை துடிக்கிறது; ஆண்டுக்கு மூன்றரை கோடி முறை இப்படி செய்கிறது என்றால், அதற்கு எந்த அளவுக்கு பலம் தேவை. அப்படியானால், நம் இதயத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள வேண்டும் தானே?அதை விட்டு மாரடைப்பு வந்துவிடுமோ என்று , நம் சமச்சீரான உணவு, அன்றாட வாழ்க்கை முறையை கடைபிடிப்பதை மறந்து விடுகிறோம்."அதிக இதயத்துடிப்பு, அதிகமாக சுவாசம் விடுவது, காரணமில்லாமல் வியர்ப்பது, கை, கால் தசை வலி, , காலை எழுந்தவுடன் உடல் தளர்வு ஆகியவை இருந்தால் உஷராகி விடலாம். டாக்டரை பார்ப்பது நல்லது.இதயத்தில் இறுக்கம், பட படப்பு, மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், இதயத்தில் ஆரம்பித்து, இடது கை, கழுத்து வரை வலி தொடர்ந்து இருப்பது என்றால், கண்டிப்பாக பயப்பட வேண்டும்; பதட்டப்படாமல் டாக்டரிடம் போய் விட வேண்டும்.



பயத்தை விடுங்க முதல்ல:



"டிவி'யை போட்டால், பத்திரிகைகளை படித்தால், மாரடைப்பு பற்றி ஏதாவது செய்தி வந்தால் பலருக்கும் டென்ஷன் தான்; "நமக்கும் வந்து விடுமோ' என்று இன்னமும் கூட இவர்கள் காரணமின்றி பயப்பட்டு கொண்டிருக்கின்றனர். இப்படி பயப்படுவதை விட, நாம் சரியாகத்தான் உடல் நிலையை வைத்திருக்கிறோமா என்று உறுதி செய்து கொள்வது நல்லது!



இப்போது மாஸ்டர் ஹெல்த் செக்கப் வசதிகள் உள்ளன. இதை செய்து கொண்டால், இதயம் உட்பட முக்கிய உறுப்புகள் சரிவர இயங்குவது பற்றி தெரிந்து விடும். தேவைப்பட்டால், சரி செய்யவும் டாக்டர் ஆலோசனை கிடைக்கும்.வாரத்துக்கு மூன்று, நான்கு நாள் தலா ஒரு மணி நேரம் உடற்பயிற்சி போதும். வாக்கிங் கண்டிப் பாக தேவை. பணத்தை கொட்டி, உடலை வறுத்தும் பயிற்சி தேவையில்லை.



மறதி வாட்டுதா?



"சே, போன வாரம் பார்த்தமே, அந்த நண்பர் பெயர் மறந்திட் டோமே...' என்று மட்டுமல்ல, "நேற்று சாப்பிட்டது கூட மறந்து போச்சுப்பா' என்று கூட சிலர் புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஒருவர் 20 வயதை தாண்டும் போது, மூளை செல்கள் குறைய ஆரம்பிக்கிறது. வயதாக வயதாக , மூளை செல்களுக்கு தேவையான ரசாயனத்தை உடல் தருவதும் குறைகிறது; போகப் போக உடல் நிலை காரணமாக செல்கள் குறைவது அதிகரிக்கிறது. இது தான் மறதிக்கு முக்கிய காரணம்.



அடிக்கடி அன்றாட பழக்க வழக்கத்தை மாற்றக்கூடாது; தினம் செய்ய வேண்டியதை பட்டியலிட வேண்டும்; சிந்தனை திறன் வேண்டும்; படிப்பது உட்பட எந்த செயலிலாவது ஆக்டிவாக இருக்க வேண்டும். மனதில் சில விஷயங்கள் குறித்து அசை போட்டபடி இருக்க வேண்டும். இவையே நினைவாற்றலை திடப்படுத்திக் கொள்ள வழிகள்.



நண்பர்கள் இல்லையா?



சிலருக்கு ஆபீஸ், வீடு இரண்டை தவிர வேறு எதுவும் தெரியாது; எந்த பொழுதுபோக்குக் கும் போக மாட்டர்; கருத்தரங்கு, கூட்டம், இசை நிகழ்ச்சி, நாடகம் போன்றவற்றுக்கு போகவே மாட்டர்; யோகா, உடற்பயிற்சி, வாக்கிங் போக மாட்டர். இந்த பழக்க வழக்கமெல்லாம், நல்ல நண்பர்கள் வட்டத்தை ஏற்படுத்தும். ஓய்வு பெறும் வரை ஆபீஸ் நண்பர்கள் போதும் என்றாலும், ஓய்வு பெறும் போது தான் நண்பர்கள் இல்லாத குறை அதிகமாக உணரப்படும்.நல்ல கருத்துக்களை பரிமாறிக் கொள்வது, யோகா போன்ற வகுப்புகளுக்கு போவது போன்றவற்றுக்கு உதவுவது மட்டுமின்றி, தவறான பழக்கங்களை கைவிடவும், மன அழுத்தம் போக்கவும் நண்பர்கள் கண்டிப் பாக தேவை.அடிக்கடி நூலகம் போகலாம்; யோகா போன்றவற்றில் பயிற்சி பெறலாம்; சமூக சேவையில் ஈடுபடலாம்; இலக்கியம், கவிதை உட் பட பல்வேறு கிளப்களில் சேரலாம். இங்கெல்லாம் நட்பு வட்டத்தில் உங்களுக்கு இடம் கிடைக்கும்.



வயதானவரா நீங்கள்?



"இதுவரைக்கும் எந்த கோளாறும் வரவில்லை; திடமாக இருக்கிறேன்' என்று வயதான சிலர் சொல்லலாம். ஆனால், அதற் காக முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டாம் என்பதில்லை. கண்டிப் பாக எல்லா வகையிலும் உடல் நிலையை பார்த்துக்கொள்ள வேண்டும்.கண் பார்வை சரியாக இருக்கிறதா என்று அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ள வேண்டும்; மருந்து சாப்பிடுவதில் தவறுதல் கூடவே கூடாது; வீட்டில் இருட்டில் நடப்பது, பரணில் இருந்து பொருட்களை இறக்குவது போன்ற வேலைகளை செய்யவே கூடாது.நிற்பதற்கு, நடப்பதற்கு உடலில் பேலன்ஸ் தேவை. அதற்காக முக்கியமானது, சரியான செருப்பு. தடுக்கி விழும் அளவுக்கு செருப்பை வாங்கக்கூடாது.



அடிப்படை யோகா போதும்



மாதத்துக்கு சில ஆயிரம் கட்டி யாரிடமோ யோகா பயிற்சி பெறுவதோ, ஏகப் பட்ட ரூபாய் செலவழித்து "ஷூ' மற்றும் ஷாட்ஸ் வாங்கி வாக்கிங் போவதோ எந்த பலனும் தராது. அதிலும், நண்பர்களுடன் கடலை கொறித்துக்கொண்டு பேசியபடி நடப்பதும் பலனில்லாதது.யோகாவை பல ஆன்மீக அமைப்புகள் கற்றுத்தருகின்றன. சூரிய நமஸ்காரம் உட்பட, அடிப் படை யோகா பயிற்சி பெற்றால் போதும்; மூச்சுப்பயிற்சி பெற்றால் போதும். இவற்றை தினமும் செய்து வந்தாலே, ஆரோக்கியம் தான்.



- "அப்பல்லோ லைப்' இதழில் இருந்து கிடைத்த தகவல்கள்.