சின்ன விஷயம் தானே...! இப்படி நினைச்சீங்க...



நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப் பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங் கள் நட்பின் நெருக்கத்தை காட்ட செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத் துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங் கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார்.



அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டாமா? இது பலருக்கு தெரிவதில்லை. சுத்தம் இருந்தால், பாதி உடல் கோளாறுகளை தவிர்க்கலாம். திறந்து வைத்த ஆறிய சாப்பாடு, குழம்பு, கறி வகைகள், ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றால் தான் பல தொற்றுநோய்கள் வருகின்றன. காலை, மாலை குளிப்பது, பல் தேய்ப்பது, கை, கால்களை சுத்தமாக வைத்திருப்பது, வீட்டில் தூசி படியாமல் பார்த்துக்கொள்வது, அதிக வேலை செய்யாமலும், அதே சமயம் சுறுசுறுப்பு குறையாமலும் இருப்பது, வெளியில் சாப்பிடுவதை தவிர்ப்பது, குளிர் பானம் போன்றவற்றை குறைப்பது, முடிந்தவரை வாகனத்தை தவிர்த்து நடப்பது, யோகா போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவது போன்றவை மட்டுமே, உங்களுக்கு நாற்பதில் சர்க்கரை, ரத்த அழுத்தம் வராமல் தடுக்கும் வழிகள்.டீன் ஏஜில் இருப்பவர்கள் இதை இப்போதே உணர்ந்தால், கண்டிப்பாக எந்த ஆரோக்கிய குறைவுக்கும் ஆளாகமாட்டார்.



வாரத்துக்கு 40 மணி நேரம்



வாரத்துக்கு 40 மணி நேரத்துக்கு மேல் உழைப்பவரா நீங்கள்? உடல் உழைப்பாக இருந்தால், சிறிய இடைவெளியுடன் வேலை செய்வது பரவாயில்லை; மூளையை கசக்கும் வேலையாக இருந்தால், இந்த நேரத்தை தாண்டி செய்தால், மூளையை பாதிக்குமாம்! அதுவும், நடுத்தர வயதை தாண்டிய பின் இந்த பாதிப்பு தெரியும். அதனால் தான் திறமை, சுறுசுறுப்பு குறைகிறது என்று நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டன் மனோதத்துவ நிபுணர் கள் மேற்கொண்ட ஆய்வில், "வாரத்துக்கு அதிக பட்சம் 40 மணி நேரம் வேலை செய்ய முடியும். அதை தாண்டி வேலை செய்வோருக்கு மூளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும். நடுத்தர வயதில், அவர்களால் முன்பிருந்தது போல ஈடுபாட்டுடன் வேலை செய்ய முடியாது' என்று கண்டுபிடித்துள்ளனர்.சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரந்தோறும் ஐந்து நாட்கள், தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் இவர்கள் சோர்வடைகின்றனர்; மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர்.



உப்பு பெறாத விஷயமல்ல



சர்க்கரை, உப்பு இரண்டுமே தொல்லை தான். இரண்டும் மிகவும் சரிசமமாக இருக்கும் வரை பிரச்னையில்லை. இரண்டில் உப்பு தான் மிக ஆபத்தானது. சிலர் சாப்பாட்டில் உப்பு போதவில்லை என்று தனியாக உப்பை சாம்பார், ரசம், பொரியலில் போட்டு சாப்பிடுவர். இது மிகக்கெடுதல் என்கின்றனர் டாக்டர்கள்.முப்பது வயது வரை பரவாயில்லை; ஆனால், அதை தாண்டி உப்பு அதிகமாக சேர்த்துக்கொண் டால், தினமும் சாப்பாட்டுக்கு ஈடாக மாத்திரைகளை விழுங்க வேண் டிய கட்டாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.சாதாரண இருமல், காய்ச்சல், ஜீரணத்துக்கு எல்லாம் விழுங்கும் ஆன்டாசிட்ஸ், லேக்சடிவ்ஸ், ஆஸ்பிரின்ஸ் மாத்திரைகளில் சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகளில் சோடியம் உள்ளது; போதாக்குறைக்கு டேபிள் சால்ட்டை போட்டுக்கொண்டால் என்னாவது? நீங்கள் எப்படி, உப்பு பிரியராக இருந்தால் கண்டிப்பாக "தடா' போடுங்க!



உடனே மாத்திரை வேண்டாம்



சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும்; அவர்களுக்கு 'மைக்ரேன்' தலைவலியாக இருக்கலாம். அதனால், டாக்டரிடம் போய் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வர வேண்டும். ஆனால், காரணமே இல்லாமல் அடிக்கடி தலைவலி வந்தாலும் உஷாராகிவிட வேண்டும். சிலருக்கு, ஆபீசில் வேலை செய்த பின் தலைவலி வரும். இது சாதாரண தலைவலி தான். ரத்த அழுத்தம் காரணமாக வருகிறது என்று எண்ண வேண்டாம். அதிக வேலை செய்ததால் ஏற்பட்ட தலைவலி தான். வெளியில் காற்று வாங்கிவிட்டு வந்தாலே தலைவலி பறந்து போச்!



35 வயது வரை பெண்ணே!



ஆண், பெண்கள் இரண்டு பேருக்கும் கால்சியம் மிக முக்கியம். எலும்புகள் வலுவாக இருக்க இது இல்லாமல் முடியாது. ஆனால், பெண்களை பொறுத்தவரை, கண்டிப்பாக இதன் தேவை உள்ளது.பெண்கள், வயதான பின் கால்சியம் மாத்திரை விழுங்கலாம், கால்சியம் சத்து உணவுகளை சாப்பிடலாம் என்றால் முடியாது; அப்போது மூட்டு வலி ஆரம்பித்துவிடும்.டீன் ஏஜ் பெண்கள், பால், பால் பொருட்கள், தயிர், ரெய்த்தா, கீர், குல்பி போன்றவற்றை சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், 35 வயதுக்குள் இவற்றை சாப்பிட்டு வந்தால் தான் அதன் பின் 50களில் மூட்டு வலி என்று புலம்ப வேண்டாம்.