தினேஷ் - வயது 67. அதுவரை கண்கள் பெரிய அளவில் மறைத்ததில்லை. ஆனால், சில மாதங்களாகவே படிப்பதில் மட்டுமல்ல, நடக்கும் போதும், மற்ற சமயங்களிலும் ஒரு வித பாதிப்பு தெரிந்தது அவருக்கு. கண் டாக்டரிடம் போனார். பரிசோதித்துப்பார்த்த டாக்டர், அவரை ரத்தப் பரிசோதனை செய்யச் சொன்னார்.


ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பார்த்தபோது டாக்டர் அதிர்ந்து போனார். "உங்களுக்கு சர்க்கரை நோய் உண்டா? மருந்து ஏதாவது எடுத்துக்கொண்டு வருகிறீர்களா?" என்று கேட்டார். "என்ன டாக்டர், எனக்காவது, சர்க்கரை வியாதியாவது? எப்போதும் வந்ததே இல்லை. ஒரு முறை கூட நான் பரிசோதனை செய்ததே இல்லையே' என்று பதில் அளித்தார் தினேஷ்.


"உங்களுக்கு ஐந்தாண்டாக சர்க்கரை கோளாறு இருக்கிறது' என்று டாக்டர் சொன்னபோது, "சேச்சே! என்ன டாக்டர் விளையாடுறீங்க, அதெல்லாம் பொய்' என்று திரும்பச் சொல்ல, டாக்டர் சற்றே சீரியசாக "இல்லை மிஸ்டர் தினேஷ், உள்ளுக்குள் சர்க்கரை கோளாறு இருக்கும் பலர் இருக்கின்றனர். அவர்களை போலத் தான் நீங்கள். இனியாவது கவனித்துக் கொள்ளுங்கள்' என்று கூறி, சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணரிடம் பரிசோதித்துக் கொள்ளும்படி, சிபாரிசு கடிதம் எழுதித் தந்தார்.




பி.எம்.ஐ.,32.5


ஒருவருக்கு உடல் பருமனாகி விட்டது என்பதற்கு அளவு கோல் பி.எம்.ஐ.,யில் அளவு 23. உடல் பருமன் முற்றி விட்டது என்பது , 25 ஐ தாண்டினால் சொல்லப்படுகிறது.


பி.எம்.ஐ.,25 ஐ தாண்டி விட்டாலே, மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும், 32.5 ஐ தாண்டி விட்டால்,


வேறு வழியே இல்லை. உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை கூட செய்து கொள்ளலாம்.




பெண்களுக்கு 80


ஆண்களுக்கு 90 சென்டிமீட்டர், அதாவது 35 அங்குலம்; பெண்களுக்கு 80 சென்டிமீட்டர், அதாவது, 31 அங்குலம் இடுப்பளவு இருந்தால் உடல் பருமன் என்று பொருள்.


* நீங்கள் உயரம் ஐந்தடி இருந்தால் 53.5 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும்.


* 5.5 அடி உயரம் இருந்தால், உங்கள் எடை 60 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.


* உயரம் ஆறடியாக இருந்தால் உங்கள் எடை 74.5 கிலோவுக்குள் இருக்க வேண்டும்.


இதைத்தாண்டி இருந்தால் ஷுகர் டெஸ்ட் பண்ணித்தான் ஆக வேண்டும்.




ஓசைப்படாமல்


சர்க்கரை நோயும் சரி, இதய நோயும் சரி, ஓசைப்படாமல் தான் வரும். எப்போது வரும், யாருக்கு வரும் என்பதே சொல்ல முடியாது. பல சிம்பிளான அறிகுறிகளை டாக்டர்கள் சொல்லத்தான் செய்கின்றனர். ஆனால், பலரும், "வரும் போது வரட்டும்;பார்த்துக் கொள்ளலாம்' என்று கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.




ஷுகர்! ஒரு விளக்கம்


உடலுக்கு க்ளூக்கோஸ் என்பது, எரிசக்தி போல; பைக்குக்கு பெட்ரோல் போடுவதுபோல!ஆம், க்ளூக்கோஸ் , உடலுக்கு தேவையான ஒன்று தான். ஆனால், அதுவே அதிகமானாலோ ஆபத்து தான். கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது தான் சர்க்கரை வியாதி உருவாகிறது.


இனி படத்தை பாருங்கள்:




1. சாப்பிடும் போது உணவுக்குழாய் வழியாக வயிற்றுக்குள் செல்லும் உணவு, உள்ளே நொறுக்கப்பட்டு க்ளூக்கோஸ் ஆக பிரிகிறது.




2. உணவில் இருந்து பிரிந்த க்ளூக்கோஸ், ரத்தத்தில் சேர்கிறது. ரத்தம் மூலமாக , செல்களுக்கும், மற்ற உறுப்புகளுக்கும் க்ளூக்கோஸ் செல்கிறது.




3.இன்சுலின் - உடலில் உள்ள கணையத்தில் உள்ள சுரப்பி தான்இன்சுலினை தடையில்லாமல் சுரக்கிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மிகாமல் கட்டுப் படுத்தும் பணி இதனுடையது.




4. ரத்தத்தில் எப்போதெல்லாம் க்ளூக்கோஸ் அளவு அதிகமாகிறதோ, அப்போது தானாகவே, கணையத்தில் உள்ள சுரப்பி தானியங்கி வேலை செய்து இன்சுலினை சுரக்கும். அப்படி சுரந்து, சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.




5. கணையத்தில் உள்ள சுரப்பியால், இன்சுலின் சுரக்க முடியாத நிலை ஏற்பட்டாலோ, போதுமான அளவில் சுருக்க முடியாமல் போனாலோ, அப்படியே இன்சுலின் சுரந்து, அதை பயன்படுத்திக்கொள்ள முடியா நிலை ஏற்பட்டாலோ ஏற்படுவது தான் சர்க்கரை வியாதி.




6. டைப் - 1 ஷுகர் : ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து விட்டால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி பலவீனம் அடைகிறது. அப்போது கணையத்தில் உள்ள சுரப்பி செயலிழக்கிறது. இன்சுலின் சுரப்பது நிற்கிறது. இது தான் டைப் 1 ஷுகர்.




7. டைப் - 2 ஷுகர் : இன்சுலின் சுரந்தும், அதை உடல் ஏற்றுக்கொள்ளாமல் பாதிக்கப்படுவது தான் இது. இதனால், உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.




8. கல்லீரல், வயிற்றுக்கு பின் பகுதியில் உள்ள கணையம். அங்கிருந்து தான் இன்சுலின் சுரப்பி செயல்படுகிறது.