ஏழைகளுக்கு உதவும் டாக்டர் கோஷ் அறக்கட்டளை

நம் உடலில் இதயத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே அளவு முக்கியத்துவம் பெற்றவை மூளை மற்றும் நரம்பு மண்டலங்கள். "நியூராலஜி' எனப்படும் நரம்பியல் மருத்துவத் துறையில் சென்னையிலும், கோல்கட்டாவிலும் சேவை செய்து வருகிறார் டாக்டர் சித்தார்த்த கோஷ். வேலூர் சி.எம்.சி.,யில் மேற்படிப்பை முடித்த அவர், 18 ஆண்டுகளாக சென்னை மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது, நந்தனத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். ஆண்டுக்கு 600க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு, மூளையில் உள்ள குறைபாடுகளை நீக்கி நோயாளிகளை குணப்படுத்தி வருகிறார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக இலவச கிளினிக்குகளை "டாக்டர் கோஷ் அறக்கட்டளை' பெயரில் நடத்தி வருகிறார்.



சென்னை பள்ளிக்கரணையில் கே.பி., ஆயில் மில் அருகிலும், கோல்கட்டாவில் பேக் பஜாரிலும் இந்த கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. கிளினிக்கிற்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டால், அவர்களை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து தனது சொந்த செலவில், அறுவை சிகிச்சைக்கு கூட கட்டணம் பெறாமல் சிகிச்சை அளித்து வருகிறார்.அப்பல்லோ மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய அறை வாடகை உள்ளிட்ட இதர மருந்து கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.



இந்த வகையில் குறைந்த செலவில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சேவை குறித்து டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறியதாவது: ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக எங்கள் அறக்கட்டளை மூலம் எங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை உதவி செய்துள்ளோம். மருத்துவ மாணவர்களுக்கு படிப்பு உதவிகள் செய்து வருகிறோம்.



அறக்கட்டளை சார்பில் புதிய கிளினிக்குகள் அமைக்க ஆர்மீனியன் சர்ச் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எங்களது அறக்கட்டளைக்கு அரசும் உதவினால் மகிழ்ச்சி அடைவோம்.இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் மிகவும் சிக்கலான, "ஸ்கல் பேஸ்டு நியூரோ சர்ஜரி'களை செய்துள்ளேன். சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருப்பதால் அவர்களுக்கு கழுத்து வலி, இடுப்பு வலி ஏற்படுகிறது. அதிக நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். கழுத்து வலி அதிகரித்து கைகளுக்கு வலி பரவினால் நரம்பியல் டாக்டரை பார்ப்பது அவசியம்.



இவ்வாறு டாக்டர் சித்தார்த்த கோஷ் கூறினார்.



தொடர்புக்கு: கிருஷ்ணகுமார்; போன்: 99400 22925