தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கம்பு மாவை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசிறி... ஆவியில் வேக விட்டு எடுக்கவும். பொடித்த வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கரைசலில் வறுத்து, வேக வைத்து, ஆற வைத்த கம்பு மாவு, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.


தேவையானவை: தினை மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துண்டுகள் - கால் கப், சுக்குப்பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் தினை மாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறி ஆவியில் வேக வைத்து ஆற விடவும். பொடித்த கருப்பட்டியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, பாகாகக் காய்ச்சவும். நறுக்கிய தேங்காய் துண்டுகள், சுக்குப்பொடி சேர்த்துக் கலக்கி, ஆற வைத்துள்ள கம்பு மாவில் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டிக் கொள்ளவும். இதேபோல் ஒவ்வொரு உருண்டையாக உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்க... தினை மாவு கொழுக்கட்டை ரெடி!


தேவையானவை - மேல் மாவுக்கு: பச்சரிசி மாவு - 2 கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு: பாசிப்பயறு - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். அதில்... உப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவும். கொதிக்கும்போதே, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி, கட்டியில்லாமல் நன்கு கிளறவும். மாவு கெட்டியானதும் இறக்கி, 10 நிமிடம் ஈரத் துணியால் மூடி வைக்கவும்.
பாசிப்பயறை 6 மணி நேரம் ஊற வைத்து, பின் வேக விடவும். வெந்ததும் தண்ணீரை வடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பூரணம் ரெடி!
தயார் செய்து வைத்துள்ள மேல் மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, கிண்ணம் போல் செய்து கொள்ளவும். அதனுள் பாசிப்பயறு பூரணத்தை வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்து கொள்ளவும். அவற்றை ஆவியில் வேக விட்டு எடுத்தால்... பாசிப்பயறு கொழுக்கட்டை தயார்!
வேக வைத்த பயறுக்கு பதிலாக முளைகட்டிய பயறையும் பயன்படுத்தலாம்; இந்த கொழுக்கட்டையை காராமணியிலும் செய்யலாம்.


தேவையானவை: பச்சரிசி மாவு, கருப்பட்டி - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: கருப்பட்டியைப் பொடித்து தண்ணீரில் கரைத்து கொதிக்கவிடவும். அதனை வடிகட்டி ஆறவிடவும். அந்தப் பாகில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பச்சரிசி மாவு ஆகியவற்றை சேர்த்துக் கிளறி கெட்டியாகப் பிசையவும்.
அந்த மாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, எண்ணெய் தடவிய உள்ளங்கையில் வைத்து உருளைகளாகப் பிடிக்கவும். இதேபோல் ஒவ்வொன்றையும் தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
தேங்காய் துருவலுக்குப் பதிலாக, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கியும் சேர்க்கலாம்